14 January 2013

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
 
அருஞ்சொற்பொருள்:
 
வாக்கு உண்டாம் = திருந்திய சொல்வளம் உண்டாகும்;
நல்ல மனம் உண்டாம் = தெளிந்த நல்லெண்ணம் உண்டாகும்;
மாமலராள் = செந்தாமரைப் பூவினில் வீற்றிருக்கும் (இலக்குமி) தேவி;
நோக்கு உண்டாம் = அருட்பார்வை உண்டாகும்;
மேனி = உடல், நுடங்காது = பிணிகளால் தள்ளாடாது;
பூக்கொண்டு = மலரிட்டு;
துப்பு ஆர் = வலிமை நிறைந்த;
திருமேனி = அழகிய உடல்;
தும்பிக்கையான் = துதிக்கையை உடைய, பாதம் = திருவடிகள்;
தப்பாமல் = முறையாக;
சார்வார் தமக்கு = வணங்குவோருக்கு.
 
பாடல் விளக்கம்:
 
வலிமை நிறைந்த திருமேனியையும், துதிக்கையையும் உடைய விநாயகக் (அருகக்) கடவுளின் திருவடிகளை முறையாக மலரிட்டு வணங்குவோருக்கு திருந்திய சொல்வளமும், தெளிந்த நல்லெண்ணமும், செந்தாமரைப் பூவினில் வீற்றிருக்கும் (இலக்குமி) தேவியின் அருட்பார்வையும் உண்டாகும்; அவர்தம் உடலை பிணியும் மூப்பும் அணுகாது.

13 January 2013

நடராஜப்பத்து-11


சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செய்வாய்

குருசந்திரன் சூரியனிவரை,

சற்றெனக் குள்ளாக்கி ராசி பனிரெண்டையும்

சமமாய் நிறுத்தியுடனே,

பனியொத்த நட்சதிரங்க ளிருபத்தேழும்

பக்குவப்படுத்திப் பின்னால்,

பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்

பலரையும் அதட்டி யென்முன்,

கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற

கசடர்களையுங் கசக்கி,

கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்குத்தொண்டரின்

தொண்டர்கள் தொழும்பனாக்கி,

இனிய வள மருவுசிறு மணவை முனுசாமி யெனை

யாள்வதினி யுன்கடன் காண்,

ஈசனே சிவகாமி நேசனே

யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

12 January 2013

நடராஜப்பத்து-10

 
இன்னமுஞ் சொல்லவோ உன்மனங் கல்லோ
 
இரும்போ பெரும்பாறையோ,
 
யிருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
 
யிது வுனக்கழகு தானோ,
 
என்னன்னை மோகமோ யிதுஎன்ன சோபமோ
 
யிதுவேவுன் செய்கைதானோ,
 
இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ
 
யானாலும் நான் விடுவனோ,
 
உன்னைவிட் டெங்குசென் றாலும் விழலாவனோ
 
நான் உனை யடுத்துங் கெடுவனோ,
 
ஓகோ விதுன்குற்ற மென்குற்ற மொன்று மிலை
 
யுற்றுப்பார் பெற்றவையா,
 
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
 
இனியரு ளளிக்க வருவாய்,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

11 January 2013

நடராஜப்பத்து-09

 
தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
 
தன்பிறவி யுறவு கோடி,
 
தனமலை குவித்தென்ன கனபெய ரெடுத்தென்ன
 
தாரணியை யாண்டுமென்ன,
 
சேயர்களிருந்தென்ன குருவா யிருந்தென்ன
 
சீஷர்களிருந்துமென்ன,
 
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
 
செய்தென்ன நதிகளெல்லாம்,
 
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை
 
ஒன்றைக் கண்டு தடுக்க,
 
உதவுமோ யிதுவெலாம் தந்தையுற வென்று
 
தான் உன்னிரு பாதம் பிடித்தேன்,
 
யார்மீது வுன்மன மிருந்தாலும் உன் கடைக்
 
கண் பார்வை யதுபோதுமே,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

10 January 2013

நடராஜப்பத்து-08

 
காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
 
கன்னியர்கள் பழிகொண்டனோ,
 
கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ
 
கிளைவழியில் முள்ளிட்டனோ,
 
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ
 
தந்தபொரு ளிலையென்றனோ,
 
தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ
 
தவசிகளை யேசினேனோ,
 
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
 
வானவரைப் பழித்திட்டனோ,
 
வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ
 
வந்தபின் என் செய்தனோ,
 
ஈயாத லோபி யென்றே பெயரெடுத்தனோ
 
யெல்லாம் பொறுத் தருளுவாய்,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

9 January 2013

நடராஜப்பத்து-07

 
அன்னை தந்தைகளென்னை யீன்றதற் கழுவனோ
 
அறிவிலா ததற்கழுவனோ,
 
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
 
ஆசை மூன்றுக் கழுவனோ,
 
முன்பிறப் பென்னவினை செய்தனென் றழுவனோ
 
என் மூட வறிவுக்கழுவனோ,
 
முன்னிலென் வினைவந்து மூளுமென் றழுவனோ
 
முத்தி வரு மென்றுணர்வனோ,
 
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்த ழுவனோ
 
தவமென்ன வென்றழுவனோ,
 
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
 
தரித்திர திசைக்கழுவனோ,
 
இன்னமென் னப்பிறவி வருமோவென் றழுவனோ
 
யெல்லா முரைக்க வருவாய்,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

8 January 2013

நடராஜப்பத்து-06

 
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
 
வாஞ்சை யில்லாத போதிலும்,
 
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
 
வஞ்சமே செய்த போதிலும்,
 
மொழியெகனை மொகனையில் லாமலே பாடினும்
 
மூர்க்கனேன் முகடாகினும்,
 
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
 
முழுகாமியே யாகினும்,
 
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
 
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
 
ஊரறிய மனைவிக்கு பாதியுடலீந்தநீ
 
பாலனைக் காக்கொணாதோ,
 
யெழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
 
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!